திருப்பூரில் பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தம்பதியர் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ப்ரீத்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று நாகராஜ் தனது மனைவி, மகளை அழைத்துக் கொண்டு திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
இரவு நேரத்தில் அவர்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில் தாராபுரம் - ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் அருகே பாலம் கட்டும் பணிக்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்துள்ளது. அந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் பள்ளம் இருப்பது தெரியாமல் நாகராஜ் குடும்பத்துடன் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
பள்ளம் இருந்த பகுதி இருட்டாக இருந்ததால் விடியும்வரை நாகராஜ் குடும்பத்தினர் அதில் விழுந்து கிடப்பது யாருக்கும் தெரியவில்லை. அதனால் நாகராஜும், அவர் மனைவி ஆனந்தியும் பலத்த அடிபட்டு ரத்தம் அதிகமாக வெளியேறி உயிரிழந்துள்ளனர். விடிந்தபோது அந்த பகுதி வழியாக சென்றவர்கள் ஒரு குடும்பமே பள்ளத்தில் விழுந்து இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஆம்புலன்ஸ், போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதில் நாகராஜ், ஆனந்தி நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் ப்ரீத்தா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளம் தோண்டியவர்களின் அலட்சியம் காரணமாக் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Edit by Prasanth.K