பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை,” என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் கூறியபோது, மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பதுங்கும் இடங்களை கண்டுபிடித்து, அவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளை பற்றி யோசிக்க வேண்டும்,” என்றும் வைகோ கூறினார்.