Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பக்கம் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார் தினகரன். இதன் எதிரொலியாக, அவரை ஆதரிக்கும் 19 அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சமீபத்தில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். மேலும், தற்போது அந்த எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால், எதிராக 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ஏற்கனவே 19 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு உள்ள நிலையில், மேலும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களில் 3 பேர் தினகரன் பக்கம் சாய்ந்துள்ளனர் எனவும், விரைவில் அவர்கள் பாண்டிசேரியில் 19 எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டிற்கு வருகிறார்கள் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.