Publish Date: Fri, 26 Jun 2026 (14:32 IST)
Updated Date: Fri, 26 Jun 2026 (14:35 IST)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக அதிமுக சட்டசபையில் எதிர்க்கட்சியாகக் கூட அமர முடியாத நிலையில் இருக்கிறது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக அதிருப்தியடைந்த சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்ததோடு, சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதனால் கோபமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அந்த 24 எம்.எல்.ஏக்களிடமும் இருந்த முக்கிய பதவிகளை பறித்தார். அதன்பின் அதில் நான்கு எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அதன்பின் சிவி சண்முகத்தை தவிர மற்ற எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சக்கமே சென்று விட்டனர்..
அதோடு தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை தங்களுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் பேசி வந்தனர். இந்நிலையில்தான் சமீபத்தில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் அதிகாரமற்ற அலங்கார பதவிகள் என அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒருபக்கம் எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் சிவி சண்முகத்திற்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் புதிய பதவிகளை ஏற்பதாக வேண்டாமா என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று சிவி சண்முகம் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் மீண்டும் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.