மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து இருக்கிறது பாஜக. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி அமைப்பதில் ராஜதந்திரியாக செயல்பட்டு வருபவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தேர்தல் திட்டங்கள், கூட்டணி கணக்குகள், யார் முதல்வர் என எல்லாவற்றையுமெ இவர்தான் வடிவமைக்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை பாஜக கட்டுப்படுத்த துவங்கியது. அதேநேரம் பாஜகவோடு இருந்தால் வாக்கு வாங்க முடியாது, குறிப்பக சிறுபான்மையினரின் வாக்குகளை இழப்போம் என்பதை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சில வருடங்கள் அந்த கூட்டணியில் இருந்தார். ஆனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்பது உறுதியானதும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
பீகார், ஒரிசா போன்ற பல மாநிலங்களிலும் அமித்ஷவின் வியூகம் வொர்க் அவுட் ஆகும் நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை எடுபடவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தபோது மெகா கூட்டணி அமைப்போம் என்றார் அமித்ஷா. ஆனால், பல மாதங்களாகியும் இன்னும் இந்த கூட்டணிக்கு தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் வரவில்லை. தற்போதுவரை அதிமுக, பாஜக இரண்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருக்கிறது.
பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அமைதியாக இருக்கின்றன. ஒருபக்கம் எல்லா கட்சியிலும் பல குழப்பங்களும் நிலவுகிறது. பாமகவில் அப்பா மகனுக்கு இடையே பிரச்சனை, தேமுதிகவில் விஜயகாந்த் இல்லாதது பெரிய குறை, அதிமுகவில் செங்கோட்டையன் பிரிந்து சென்றது, ஒருபக்கம் டிடிவி தினகரன் விஜய்க்கு ஆதரவாக பேச தொடங்கி இருப்பது என இது எல்லாமே NDA கூட்டணிக்கு தலைவலியாக மாறியிருக்கிறது.
திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமான் தனித்து போட்டி என அறிவித்துவிட்டார். விஜயோ நான்தான் முதல்வர் வேட்பாளர் என சொல்லி NDA கூட்டணிக்கு ஆப்பு வைத்துவிட்டார். ஒருபக்கம், தவெக தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டிருக்கிறார். இதில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு எந்த கட்சிகள் எல்லாம் வரும் என அமித்ஷா நினைத்தாரோ அந்த எல்லா கட்சியிலும் பிரச்சனை நிலவுகிறது. அவர்கள் யாரும் நாங்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைகிறோம் என இதுவரை சொல்லவில்லை. அதிமுகவோடு இணைந்து மற்ற கட்சிகளையும் சேர்த்து மெகா கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் வியூகம். ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.