50 வருடங்களுக்கு மேல் அதிமுகவில் இருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் பலமுறை எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட சீனியரைத்தான் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் பேசியதை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை. எனவே முதலில் செங்கோட்டையனின் பதவியை பறித்தார். ஆனால் ஒரு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோடையன் சந்தித்து பேசியது பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தவே செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டார்.
ஒருபக்கம் அதிமுகவை ஒன்றிணைத்து அதை வலுப்படுத்த சொன்னதே பாஜக தலைமைதான் என செய்தியாளர்களிடம் வெளிப்படையாக செங்கோட்டையன் சொன்னார். இது உண்மையாக இருந்தாலும் செய்தியாளிடம் வெளிப்படையாக செங்கோட்டையன் சொன்னதை பாஜக ரசிக்கவில்லை.
தற்போது பாஜக தரப்பிலிருந்து செங்கோட்டையனுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் அதிருப்தி அடைந்துதான் அவர் தவெக பக்கம் போக முடிவெடுத்திருக்கிறார் எனவும் செய்திகள் உலா வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே வருகிற 27ஆம் தேதி செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என்ற செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் செங்கோட்டையன் இன்னமும் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்கிறார்கள். அதேநேரம், தவெகவுக்கு செங்கோடையன் போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதி வந்தால் பலம் என விஜய் நினைக்கிறாராம்.
பாஜக தன்னை கைவிட்டு விட்டதால் விஜய் தலைமையில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் எண்ணமும் செங்கோட்டையனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜயின் தலைமையை டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டாலும் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை
.
செங்கோட்டையன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் என்கிறது அரசியல் வட்டாரம்.
ஒருபக்கம், செங்கோடையனின் மூவை பார்த்து ஷாக்கான பாஜக தரப்பு அவரை சமாதானப்படுத்தும் வேலையிலும் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.