கருணாநிதி மறைவிற்கு பின்னர் திமுக தலைவர் பதவியை விரைவில் ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலின், அந்த பதவிக்கு போட்டியும் எதிர்ப்பும் வராமல் இருக்க மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைத்து அவருக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல் கனிமொழிக்கு திமுக பொருளாளர் பதவி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவிக்கு பதிலாக மாநில அளவிலான ஒரு பதவி வேண்டும் என்று மு.க.அழகிரி வலியுறுத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மாநில அளவிலான பதவி இருந்தால்தான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு நடத்தும் அதிகாரம் தனக்கு இருக்கும் என்று மு.க.அழகிரி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மேலும் மாநில அளவிலான பதவி வழங்கினால் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் பணியை தான் ஏற்றுக்கொள்வதாக மு.க.அழகிரி தரப்பில் இருந்து உறுதி கூறப்பட்டுள்ளதாம்
இதனால் மு.க.அழகிரிக்கு விரைவில் மாநில அளவிலான பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.