Publish Date: Tue, 16 Jun 2026 (16:41 IST)
Updated Date: Tue, 16 Jun 2026 (16:43 IST)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்றது. இதனால் அக்கட்சி எதிர்கட்சியாக கூட முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. இதையடுத்து தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட செய்தி சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்து பழனிச்சாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள்
.
அவர்களில் 24 பேர் சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதோடு அவர்களில் 4 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவிலும் இணைந்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகரிடம் புகார் மனுவை கொடுத்திருக்கிறார்கள்..
இந்நிலையில்தான் விராலிமலை எம்.எல்.ஏ சி விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேடிசி பிரபாகரிடம் தற்போது அவர் கொடுத்திருக்கிறார்.அனேகமாக விரைவில் விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது பழனிச்சாமி தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.