தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையே சமீபத்தில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் டானா புயல் உருவாகியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புயல் காரணமாக கடலில் சீற்றம் மற்றும் சூறைக்காற்று வீசுவதால், கப்பல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும் என்றும், அதனால் நாகை-இலங்கை கப்பல் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.