Publish Date: Sun, 19 Jul 2026 (08:44 IST)
Updated Date: Sun, 19 Jul 2026 (08:55 IST)
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பழைய மகாபலிபுரம் சாலையில் பர்ப்பிள் லைன் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழித்தடம் நெசப்பாக்கம் முதல் சிறுசேரி வரையான வழித்தடத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக, நேரு நகர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான பகுதியில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எல் அண்ட் டி நிறுவனம் இப்பகுதியில் உள்ள 10 நிலையங்களுக்கான பைலிங் மற்றும் யு-கார்ட்டர் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த மைல்கல், ஓஎம்ஆர் வழித்தடத்தின் கட்டுமானப் பயணத்தில் மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
ஐடி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அதிகமுள்ள ஓஎம்ஆர் சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும்போது போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். மேலும், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த மெட்ரோ சேவை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
தற்போதைய வேகத்தில் பணிகள் நடைபெறும் பட்சத்தில், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இந்த வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.