கடந்த மாதம் முதலாக தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாக தமிழ்நாட்டில் கோடை வெயில் வீசி வருகிறது. கோடை மழையும் குறைவாகவே பெய்திருக்கும் நிலையில் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வந்தது. தினசரி 15 இடங்களுக்கும் மேல் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வந்தது. இந்நிலையில் வெயிலில் அவதிப்படும் மக்களை குளிர்விக்கும் விதமாக நேற்று முதலாக பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இன்றும் காலை முதல் சென்னை, கடலூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களை ஒட்டிய கடற்கரை மாவட்ட பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்தது. நேற்று 15க்கும் மேற்பட்ட இடங்களில் 107 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது. இன்று மழை பெய்ததன் காரணமாக 10 இடங்களில் 106 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோட்டில் 106 டிகிரியும், மதுரையில் 103 டிகிரியும், நாமக்கல், பாளையங்கோட்டையில் 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஒட்டிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.