வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா' புயல் நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு இலங்கையை ஒட்டி மையம் கொண்டுள்ள இந்த புயல், மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, 'டிட்வா' புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரைகளை ஒட்டி செல்லும்.
குறிப்பாக, நவம்பர் 30 மாலை வேளையில், இந்த புயல் தமிழக கடற்கரையை மிக அருகில், 25 கி.மீ. தொலைவு வரை நெருங்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.