மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'சென்யார்' புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த இந்த சின்னம், நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்று காலை புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தீவிரத்துடன் இருக்கும் என்றும், அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இந்தோனேசியா கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'சென்யார்' புயலின் நகர்வால் தமிழகத்திற்கு எந்தவித நேரடி பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை அருகே உருவாகும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு சின்னம் ஒன்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, தமிழகத்திற்கு மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.