இலங்கைக் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தியின் தலைப்பை கேலியாக வெளியிட்டதற்கு தினமலர் நாளிதழ் வருத்தம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று முன் தினம் ஈஸ்டர் பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்பட்ட வேளையில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 290 உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட தினமலர், அச்செய்திக்கு ஓ சேசப்பா எனத் தலைப்பிட்டு இருந்தது. உலகம் முழுவதும் இறந்து போன மக்களுக்காகவும் படுகாயமடைந்தவர்களுக்காகவும் வருத்தப்பட்டு மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்க தினமலரின் இந்த தலைப்பு அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூகவலைதளங்களில் உள்ள வாசகர்கள் பலர் இந்த தலைப்புக்கு எதிர்த்து தெரிவித்தனர். அதையடுத்து தினமலர் நாளிதழ் இன்று விளக்கம் ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.
இன்றைய தினமலர் இதழில் ஓ சேசப்பா! என்ற தலைப்பின் கீழ் இலங்கை துயர சம்பவம் குறித்த சில பதிப்புகளிலும் செய்தி பிரசுரமானது.அந்த தலைப்பு சரியில்லை என்று சில வாசகர்கள் பதிவிட்டிருந்தனர்.
தினமலர் விளக்கம் :-
கொடுமையான சம்பவம் நடந்து பெருமளவில் உயிர் இழப்பு நேரும்போது, கடவுளே இது என்ன கொடுமை என்று மக்கள் குமுறுவது இயற்கை.
கிறிஸ்துவர்களாக இருந்தால், ஓ ஆண்டவரே அல்லது இயேசுவே என்று சொல்லக்கூடும். சேசப்பா என்பது இலங்கையில் வாழும் தமிழ் கிறிஸ்துவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. அந்த அடிப்படையில், ஒரு கிறிஸ்துவரின் குமுறலை எதிரொலிக்கும் விதமாகத்தான் அந்த தலைப்பு தரப்பட்டிருக்கிறது. மற்றபடி, யாரையும் கேலி செய்வதோ, யார் மனதையும் புண்படுத்துவதோ தினமலர் நோக்கம் கிடையாது.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு குறுகிய வட்டத்துக்குள்ளும் சிக்கிவிடாமல் தேச சேவையிலும் மக்கள் பணியிலும் ஈடுபட்டு வருகிற தினமலர் பற்றி நாட்டுக்கே தெரியும். இருந்தாலும், மேற்படி தலைப்பு தங்கள் மனதை புண்படுத்தி விட்டதாக யாரேனும் கருதினால், அதற்காக மிகவும் வருந்துகிறேன்.