தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் சிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தமாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில், பண்டிகையின் முக்கிய அம்சமாக பட்டாசு, மத்தாப்பு வெடிப்பது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது.
ஆண்டு முழுவதும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்த ஒரு நாளுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பதும், நாடு முழுவதற்கும் பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக உள்ளதாகவும், 50 பட்டாசு கடைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிய ரக பட்டாசுகளை வாங்கிச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதே நேரத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 20% குறைவாக பட்டாசு விற்பனை இருப்பதாக சிவகாசி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் பட்டாசுகள் அதிகம் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசியில் பட்டாசு விற்பனை குறைந்துள்ளதாகவும், ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.