சென்னை தனியார் பள்ளியில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 35 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சிலர் திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. மாணவ மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மயக்கம் அடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தகவல் அடைந்த பெற்றோர்கள் உடனே பள்ளியின் முன் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்போது குணமடைந்து வருவதாகவும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவரியுள்ளன. இருப்பினும், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.