ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி திமுக மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்க ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் ஓட்டு அளித்ததால் அரசுக்கு எதிராக செயல்படுவதாக அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறி மூன்று மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு அளித்துள்ளது. மணிப்பூர் சட்டமன்றத்தில் தகுதிநீக்க பிரச்சினையில் உள்ள எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படாததையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது.
சபாநாயகர் முடிவெடுக்காத நிலையில் நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது. இதன்மூலம் சட்டமன்றத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பங்களிப்பை திமுக நிறுத்த முனைவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.