திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் கருணாநிதியின் 96 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்பாதி வரலாற்றை நான் எழுதிவிட்டேன் மறுபாதி வரலாறை தம்பி கருணாநிதி எழுதுவான் என அண்ணாவால் பாராட்டப்பட்ட தலைவர் கருணாநிதியின் 96 ஆவது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். திமுகவின் மீது குடும்ப அரசியல், சந்தர்ப்பவாதக் கட்சி எனப் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஆனால் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை திராவிடக் கட்சிகள் தவிர வேறு எந்த கட்சியும் ஆளமுடியாமல் என நிரூபித்தற்கு முக்கியக் காரணகர்த்தாக்களுள் ஒருவர் கலைஞர். தனது 95 வயது ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளை அரசியலில் கழித்த தலைவர் கருணாநிதி, சினிமா வசனகர்த்தா, இலக்கியம், நாடகம், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். தேசிய அளவில் மூன்றாவது பெரியக்கட்சியாகத் திகழும் திமுகவின் தலைவராக 50 ஆண்டுகாலம் இருந்து அதைக் கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தவர்.
தமிழகத்தின் முதல்வராக 5 முறைப் பதவியேற்றவர் எனும் பெருமைக்குரியவர். தான் முதல்வராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டவர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அதைவிட சிறப்பாக செயல்பட்டவர் எனும் பெருமைக்குரியவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், சுயமரியாதைத் திருமணம் செய்பவர்களுக்கு சலுகை, சமத்துவபுரம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலை, தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி, நாட்டிலேயே முதல் முதலாக தகவல் தொழில்நுட்ப பூங்கா என கலைஞர் செய்த சாதனைகள் சொல்லில் அடக்கமுடியாதவை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சமத்துவக் கலைஞரே…