நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்த தகவலை அதிமுக அரசு மறைத்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்த இரண்டு தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்தது. இந்த தகவலை சட்டத்துறை அமைச்சர் மறைத்து விட்டதாக இன்று சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு மசோதா கொண்டு வந்தது. மேலும் இந்த விஷயத்தில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியது.
இதுகுறித்துப் பதில் அளித்த சி வி சண்முகம் ‘நீட் மசோதாவை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. நிறுத்திதான் வைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு இன்னும் எந்த பதிலும் வரவில்லை. இந்த தகவல் பொய் என்றால் பதவி விலகத் தயார்’ எனக் கூறியுள்ளார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.