Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பல்கலை துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன்? டாக்டர் ராமதாஸ்

Mahendran
சனி, 20 ஜூலை 2024 (14:25 IST)
தொடரும்  அடக்குமுறைகளில் ஈடுபட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது  நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும்,   அவை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளை செயல்படுத்த வலியுறுத்தியும்  பல்கலைக்கழக வளாகத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய  பெரியார் பல்கலைக்கழக  தொழிலாளர் 77 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று கேட்டு அவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி குறிப்பாணை அனுப்பியுள்ளார். பல்கலைக்கழகத் தொழிலாளர்களை அச்சுறுத்தும்  வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
 
பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஊழல்கள் அதிகரித்துள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும்  பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.  அப்படிப்பட்டவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
 
பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக இருந்த முனைவர் தங்கவேலு மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு குழு, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு வசதியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், இதை மதிக்காமல் தங்கவேலுவை ஓய்வு பெற அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்க ஆணையிட்டது. இவற்றைக் கண்டித்து தான் பல்கலைக்கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று தான்.
 
ஆனால், தமக்கு எதிராகவும், தமது நிர்வாகத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாத துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் வாயிலாக  போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை  எடுத்திருப்பது அப்பட்டமான அடக்குமுறை ஆகும். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளால், 18 வகையான முதுநிலை படிப்புகளுக்கு நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெறும் 2 பேர் மட்டுமே வரும் அளவு பல்கலைக்கழகத்தின் பெயர் சீர் கெட்டுள்ளது. இதை சரி செய்ய முடியாத துணைவேந்தர் தமக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறையை  கட்டவிழ்த்து விட்டிருப்பதை மன்னிக்க முடியாது.
 
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது தான், துணைவேந்தரின்  துணிச்சலுக்கும், அடக்குமுறைக்கும் காரணம் ஆகும். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல்  குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், தண்டனை பெற்றுத்தரவும் தமிழக அரசு அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை. தமிழக அரசு இனியாவது அதன் தயக்கத்தை உடைத்து, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் 77 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

ஆபாச படங்களை பார்த்து மருமகளிடம் தவறாக நடந்து கொண்ட மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்..!

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments