இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தாவிட்டால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்பிசி இட ஒதுக்கீட்டை புதுவை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதனை செய்ய தவறினால் நானே களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் பாமக ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.
புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா.... நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.