Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் போதை பொருள் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது- சசிகலா

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (19:51 IST)
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியில் போதை பொருள் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியில் போதை பொருள் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது.  திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நிரூபணமாகிவிட்டது. நம் இனத்தையே அழிக்கக்கூடிய வகையில் இளம் சமுதாயத்தினரை குறிவைத்து நடக்கின்ற போதை பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கடந்த வாரம் தெற்கு டெல்லியில் 2 போதை பொருள் குடோனில் சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.2000 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு கடந்த 3 ஆண்டுகளாக மூளையாக செயல்பட்டது திமுகவை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆளும் கட்சியினரின் பரிபூரண ஆசிர்வாதத்தோடு ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மேலும் இதில் கிடைக்கும் பணத்தை வைத்து திரை துறையில் முதலீடு செய்து வந்துள்ளார்களா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.
 
போதை பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. குஜராத்தில் கப்பல் வழியாக கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடல் வழியாக போதை பொருள்களை எளிதில் கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டு தமிழகத்தில் சர்வதேச போதைப்பொருள் கும்பல் போதைப்பொருள்களை பதுக்கிவருகிறதா ? என்ற அடிப்படையிலும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
 
மேலும், இன்றைக்கு மதுரை ரயில் நிலையத்தில் பிரகாஷ் என்பவரிடம் 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கு போதை பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வகையில் போதை பொருள் கடத்தல் மையமாக தமிழகம் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்று வரும் தகவல்களை பார்க்கும்போது, தமிழகம் தற்பொழுது மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக தெரியவருகிறது. தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு கண்காணிக்கிறதா? இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா? இவற்றையெல்லாம் திமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை? என்றும் தெரியவில்லை.
 
தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதாக திமுக தலைமையிலான அரசு கூறிக்கொண்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் போதை பொருள் புழக்கத்தில் முன்னேற்றம் கண்டு, இன்றைக்கு தமிழகம் போதை பொருள் விற்பனை கூடாரமாக மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
 
மேலும், திமுகவை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வடக்கு ஒன்றிய செயலாளரும்,  காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணைத் தலைவருமான ஆராமுதன் என்பவரை மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்திருப்பது, இப்பகுதி மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
எனவே, திமுக தலைமையிலான அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றமுடியவில்லை, மனிதநேயத்தை அழித்து மிருகத்தன்மையை உருவாக்கிடும் போதை பொருள் கடத்தலையும் தடுக்கமுடியவில்லை என்பது தற்போது நிரூபணம் ஆகிவிட்டது. இதன்மூலம் தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும்  கேள்விக்குறியாகிவிட்டது.
 
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே, போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு வருவதால், தமிழகத்தின் பாதுகாப்பிற்கே பெறும் அச்சுறுத்தலாகி வருகிறது. இது நாட்டின் இறையாண்மைக்கும் கேடு விளைவிப்பதாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
    
தமிழக காவல்துறையினர் யாருடைய புற அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக செயலாற்றி, இது போன்ற சட்டவிரோத செயல்களில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் நிலவும் போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதை பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும். இது வருங்கால நம் சந்ததியினருக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழக மக்கள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நடத்த போராடி வரும் வேளையில், போதை பொருட்களின் ஆதிக்கத்தால் மிகவும் கலக்கமடைந்து இருக்கிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு, நம் இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருட்களின் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளைப் போன்று இந்த ஆட்சியாளர்கள் கடைபிடித்தால்தான் அது தமிழக மக்களுக்கும் நல்லது, தமிழகத்திற்கும் நல்லது. எனவே, தமிழகம் போதை பொருட்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments