Publish Date: Wed, 29 Apr 2026 (11:55 IST)
Updated Date: Wed, 29 Apr 2026 (11:44 IST)
தமிழக தேர்தல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மிகத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று மாலை 6.30 மணி வரை எவ்வித கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126A (1)-இன்படி, தேர்தல் நடைபெறும் காலகட்டமான ஏப்ரல் 9 காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதியே தேர்தல் முடிந்த போதிலும், தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், பிற மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால், அதுவரை முடிவுகளை வெளியிடுவது வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.
தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் இந்த விதியை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு மேல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்கும் எக்சிட் போல் முடிவுகளை அறிய ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது.