கோவை, ஈரோடு பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்ததால் ஈரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அதிகபட்சமாக 37 செ.மீ. மழை பதிவுவாகியுள்ள நிலையில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் ஓடுகிறது. அதேபோல் பேரூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி செக் டேமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், பேரூர் ஆற்றுப்படித்துறையில் நிரம்பி வழியும் வெள்ள நீரால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கட்டு வழியே 1300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழைக்கொம்பு புதூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் செய்ததாகவும், அரசுப் பேருந்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.