நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 4 முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றதாகவும், ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலுக்கு கல்லூரி மாணவிகள் பலரை அறிமுகம் செய்ததாகவும், பன்வாரிலால் மதுரை வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசியதாகவும் செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நக்கீரன் இதழில் வெளியான குற்றச்சாட்டுகள் ஆளுநரின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. விருந்தினர் விடுதியில் ஆளுநர் தங்கவும் இல்லை. அங்கே அவர் நிர்மலா தேவியை சந்திக்கவும் இல்லை. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்களிலும் உண்மை இல்லை. ஆளுநரையோ, செயலாளரையோ, அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்திக்கவே இல்லை.
குறிப்பாக, கடந்த ஒராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை. நிர்மலா தேவி மீதான புகாரில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. அடிப்படை ஆதரமற்ற புகார்களை கூறியதால், நக்கீரன் கோபால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மை தெரியாமல் நக்கீரன் வந்த செய்திகளை சிலர் ஆதரிக்கின்றனர். நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.