Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராம்தாஸ்

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (14:05 IST)
‘’மானியத்தில் இடுபொருட்கள் வழங்குவதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மேட்டூர் அணையிலிருந்து வரும் 12-ஆம் நாள் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவிருப்பதால், காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள உழவர்கள் குறுவை சாகுபடிக்கு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படுவதால், கடந்த சில ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறுவை சாகுபடிக்கு தயாராகும் உழவர்களுக்கு தமிழக அரசு நியாயமான உதவிகளை வழங்க வேண்டும்.

குறுவை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு  தடையற்ற மின்சாரமும், உரம், விதைகள், ஜிப்சம், நுண்ணூட்டச்சத்து ஆகியவற்றுக்கான மானியங்களும் வழங்குவதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் கடந்த 11 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  சிறு மற்றும் குறு உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம்  நடப்பாண்டில் இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடம் பெரும் கவலையையும்,  ஏமாற்றத்தையும்  ஏற்படுத்தியிருக்கிறது.

மேட்டூர் அணையில் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத சூழலில் உழவர்களுக்கு உதவுவதற்காகத்தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதால்,  மேட்டூர் அணையிலிருந்து சரியான நாளில் தண்ணீர் திறந்து விடப்படும் ஆண்டுகளில் குறுவைத் தொகுப்பு வழங்கத் தேவையில்லை என்று அரசு கருதுவதாக கூறப்படுகிறது. அரசுக்கு அப்படி ஒரு சிந்தனை இருந்தால்  அது தவறு. கடந்த ஆண்டு குறித்த காலத்திலும், அதற்கு முந்தைய ஆண்டில் மே மாதத்திலும்  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும் கூட குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

குறுவைத் தொகுப்புத் திட்டம் ஏழை உழவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். குறுவைத் தொகுப்பு வழங்கப்படாவிட்டால் பல்லாயிரக்கணக்கான ஏழை உழவர்களால்  குறுவை  சாகுபடியே செய்ய முடியாது. எனவே, அதிக பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்படுவதையும், ஏழை உழவர்களின் நலன் காக்கப்படுவதையும் உறுதி செய்ய நடப்பாண்டிலும் குறுவை தொகுப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments