வங்கக்கடலில் இலங்கைக்கு தெற்கே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதால், நவம்பர் 28 முதல் 30 வரை டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் எம். சாய்குமார், டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
வெள்ள நிவாரண மையங்களை தயார் நிலையில் வைப்பது, நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, மின்சார பொருட்களை தயார் நிலையில் வைப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.