புத்தக வெளியீட்டு விழாவில் பேசியுள்ள இந்து என் ராம் ரஃபேல் ஊழல் காங்கிரஸ்ஸின் போஃபர்ஸ் ஊழலுக்கு இணையானது எனத் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஊழல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்குப் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் கூட்டங்களில் எல்லாம் ரஃபேல் ஊழல் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஆனால் பாஜகவும் மோடியும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் எவ்விதமான விதிமுறை மீறலோ அல்லது ஊழலோ நடைபெறவில்லை என மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ் விஜயன் எழுதிய ’நாட்டை உலுக்கும் ரஃபேல் ஊழல்’ எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை 6.30 மணிக்கு நடக்க இருந்தது. இந்த புத்தகத்தை இந்து என்.ராம் அவர்கள் வெளியிட இருந்தார் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாகக் கூறி புத்தகத்தை வெளியிட இருந்த பாரதி புத்தாகலய கடைக்கு சென்ற தமிழகக் காவல்துறையினர் புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெறக் கூடாது எனவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை அள்ளிச்சென்றும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்த காரணம் கேட்கப்பட்டபோது ‘தேர்தல் நேரத்தில் இந்த புத்தகம் வெளியாவது விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல’ எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புத்தகத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் கைப்பற்றப்பட்ட புத்தகங்களை உடனடியாக திருப்பிக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. புத்தகங்களும் உரொய நேரத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்டு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய இந்து என் ராம் ‘ ரஃபேல் ஊழல் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். அதற்கு இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். விஜயன் இந்த புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார். ஊடகங்கள் இன்று நடந்த விஷயத்தை தேசிய அளவில் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக தீர்வு கிடைக்க காரணமாக இருந்துள்ளன. இந்த ரஃபேல் ஊழலை நாம் காங்கிரஸின் போஃபர்ஸ் ஊழலோடுதான் இணைத்துப் பார்க்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி கையெழுத்தாகியுள்ளது. தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டால் வங்கி உத்தரவாதம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அது இல்லை’ என தெரிவித்தார்.
முன்னதாக இந்த புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து நூலின் pdf இணையதளங்களில் இலவசமாகக் கிடைத்தது. சுமார் ஒரு லட்சம் பேர் இதனை தரவிறக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.