Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

Advertiesment
Gold Rules by RBI

Mahendran

, புதன், 21 மே 2025 (12:49 IST)
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகள் கூட தலைமுறைகளைக் கடந்து இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய நகைகளுக்கு அவை வாங்கப்பட்டதற்கான  ரசீதுகளை  தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை  விதிப்பது  நியாயமல்ல என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
 
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.  ஏழை மற்றும் நடுத்தர மக்கள்  நகைக்கடன் பெறவே முடியாது என்ற சூழலை உருவாக்கும் இந்த புதிய விதிமுறைகள் கண்டிக்கத்தக்கவை.
 
ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும்,  அனைத்து வகையான தங்கத்திற்கும்  நகைக்கடன் வழங்கப்படாது, குறிப்பிட்ட தன்மை கொண்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்பதும் தான். இந்த இரு விதிகளும் நகைக்கடன் பெறுவதற்கு பெரும் தடையை ஏற்படுத்தக்கூடும்.
 
நகைகளை அடகு வைப்பவர்கள், அதன் உரிமைக்கான சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட  தென் மாநிலங்களைப் பொறுத்தவரை நகைகள் எனப்படுபவை குடும்பச் சொத்துகளாகவே கருதப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகள் கூட தலைமுறைகளைக் கடந்து இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய நகைகளுக்கு அவை வாங்கப்பட்டதற்கான  ரசீதுகளை  தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை  விதிப்பது  நியாயமல்ல.
 
நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள் , அதற்கு இணையான வேறு ஆவணங்களையோ அல்லது  உறுதிமொழிச் சான்றையோ அளித்து கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனாலும், அவற்றில்  சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக்கூடாது என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி நகைக்கடன் மறுக்கப்படக்கூடும்.
 
அதேபோல், ரிசர்வ் வங்கியின் நான்காவது விதியின்படி  வங்கிகளால் விற்பனை செய்யப்படும்  தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். இதனால் வேறு ஆதாரங்கங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்களால் நகைக்கடன் பெற முடியாது.
 
தங்க நகைக்கடன் என்ற  தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான்.  ஏற்கனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதை நீட்டித்துக் கொள்ள முடியாது; அடகு வைத்த நகையை மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் கடன் பெற முடியும் என்ற நிபந்தனையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய வரைவு விதிகள் நகைக்கடன் பெறுவதை மிகவும் சிக்கலாக்கி விடும். வங்கிகளுக்கு பதிலாக தனியார் நகை அடகுக் கடைகளையும், கந்து வட்டிக்காரர்களையும் அணுக வேண்டிய நிலை ஏற்படும்.
 
எனவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக  ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள வரைவு விதிகளில்  பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை  ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் அல்லது நகைக்கடன் வழங்குவதற்கான இப்போதைய நடைமுறையே  தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா தராவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்: சீனா