Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

Advertiesment
Anbumani

Prasanth Karthick

, ஞாயிறு, 4 மே 2025 (14:07 IST)

நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி  கயல்விழியை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும்,  நீட் தேர்வு  முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன.  இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி,    மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி,  ஏப்ரல் 3-ஆம் தேதி  எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா,   ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி,  இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5  மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும்  தடுக்க முடியாது.

 

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,  புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

 

நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது  குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.  இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

 

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக,  நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு  தீர்வு  தற்கொலை அல்ல என்பதை  மாணவச் செல்வங்கள்  புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!