கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறையினர் திமுக வேட்பாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர்களை குறி வைத்து சோதனை செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. நேற்றும் திமுகவின் கூட்டணி கட்சியான விசிக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் வீடுகளில் மட்டும் சோதனை செய்யும் ஐடி அதிகாரிகள் ஆளும் கட்சியினர்களின் வீடுகளில் சோதனை செய்யாதது ஏன்? என்ற கேள்வியை திமுகவினர் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'கோடிக்கணக்கில் பணம் பிரதமர் வீட்டில் நிச்சயம் பதுக்கப்பட்டிருக்கும். மோடி வீட்டில் சோதனை நடத்த வரிமான வரித்துறைக்கு தைரியம் உள்ளதா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்த வருமான வரித்துறை தயாரா?
ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாக தகவல் வந்துள்ளதே, அதை ஏன் ஐடி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. காவல்துறையில் இருந்து புகார் வந்ததால் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், மோடி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருக்கிறது நான் புகார் அளிக்கின்றேன், அங்கு சோதனை நடத்த உங்களுக்கு துணிச்சல் உள்ளதா” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமான வரித்துறையினர்களுக்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அந்த துறையின் அதிகாரிகள் என்ன பதிலளிக்க போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்