தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்ட போது இது சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ தெரியாது என வெற்றிவேல் கூறினார். ஆனால் நடந்தது வேறு என தகவல்கள் கசிகின்றன.
ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலாவும், தினகரனும் தான் என சித்தரிக்கப்பட்ட நோட்டீஸ் ஒன்றை நேற்று எடப்பாடி ஆதரவாளர்கள் வீடு வீடாக கொடுத்திருக்கிறார்கள். இதனால் தினகரன் மிகவும் அப்செட்டில் இருந்துள்ளார். நேற்று அனைவரையும் சந்தித்துவிட்டு தனியாக இருந்த தினகரனை வெற்றிவேல் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார்.
அப்போது வெற்றிவேல் தான் இந்த சூழலை சமாளிக்க ஜெயலலிதாவோட மருத்துவமனை வீடியோவை வெளியிடலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால் தினகரன் அதற்கு சம்மதிக்கவே இல்லை. அதை வெளியிடுவதாக இருந்தால் சசிகலா என்னைக்கோ வெளியிட்டிருப்பாங்க. அந்த வீடியோ வெளியானால் ஜெயலலிதாவோட இமேஜ் கெட்டுவிடும்.
என்னை நம்பி சசிகலா கொடுத்த வீடியோவை வெளியிட்டால் என்னுடைய சுய லாபத்துக்காக இதை செய்ததாகிவிடும் என கூறியிருக்கிறார் தினகரன். ஆனால் வெற்றிவேல், நீங்கள் வெளியிட வேண்டாம், நான் வெளியிடுகிறேன். உங்களுக்கும் சசிகலாவுக்கும் இது தெரியாது என நான் மீடியாவிடம் கூறிவிடுகிறேன். நீங்களும் சசிகலாவிடம் இதையே சொல்லிடுங்க, ரெய்டு நேரத்தில் என்னிடம் கொடுத்து வைத்ததாக சொல்லிடுங்க என ஐடியா கொடுத்துள்ளார் வெற்றிவேல்.
ஆனாலும் தினகரன் சமாதனமாகவில்லை, வீடியோவை வெளியிடுவது சரியாக இருக்காது. அம்மாவை யாரும் இதுவரை இப்படி பார்த்தது இல்லை. மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் பிம்பம் உடைந்து போய்விடும் என மறுத்துள்ளார். ஆனாலும் விடாத வெற்றிவேல் தினகரனை மீண்டும் சமாதானப்படுத்தியுள்ளார். அப்போது வெற்றிவேலுக்கு ஆதரவாக தினகரனின் மனைவி அனுராதா குறுக்கிட்டுள்ளார்.
எத்தனை நாளைக்கு வீடியோவை மறைத்து வைக்க முடியும். எப்படியும் ஒருநாள் வந்துதானே ஆகும். அது இப்போதே வந்தால் என்ன? நமக்கு தேர்தலில் உதவியாக இருக்கும். நாம தப்பான வீடியோ எதையும் வெளியிடலையே, அம்மா இப்படி தான் இருந்தாங்க, உயிரோடு தான் மருத்துவமனையில் இருந்தாங்க, நாங்க தான் அவங்கள பார்த்துக்கிட்டோம் என சொல்றமாதிரி தானே இருக்கும் என கூறியுள்ளார் தினகரன் மனைவி அனுராதா.
ஆனாலும் தினகரன் எதற்கும், சசிகலாவிடமும், விவேக்கிடமும் ஒருவார்த்தை பேசிடலாம் என கூறியுள்ளார். பேசினால் எதுவும் முடியாது, நான் பார்த்துக்கிறேன் நீங்க அமைதியாக இருங்க என வெற்றிவேல் கூறியுள்ளார். அதன் பின்னர் வெற்றிவேலும், அனுராதாவும் எந்த வீடியோவை வெளியிடலாம் என நீண்ட ஆலோசனை செய்து. அந்த குறிப்பிட்ட வீடியோ வெற்றிவேலின் வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.