Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறப்போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம்… கி வீரமணி அறிக்கை!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (17:12 IST)
சாதி ரீதியான கணக்கெடுப்புக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அது சம்மந்தமாக திராவிடர் கழக தலைவர் கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கி வீரமணி அறிக்கை:-

எடுக்கப் போகும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பில், சாதியைக் குறிப்பிட்டுக் கணக்கெடுத்தால்தான், சமூகத்தில் இட ஒதுக்கீடு, நாட்டின் வளர்ச்சியில் எது எது மிகவும் வளர்ச்சியடையாத மக்கள் சமூகம் என்பதை அறிந்து, திட்டமிட்டு பரிகாரம் தேட வசதியாக இருக்குமென்பதால், இந்த அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவேண்டுமென்பதை பெரும்பாலான மக்களின் பிரதிநிதிகள், கட்சிகள், இயக்கங்கள் வற்புறுத்துகின்றன. பிரதமர் மோடியிடம் நேரில் வற்புறுத்தியும், தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.ஏ.) கூட்டணிக் கட்சிக்குள் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சிகளும், அரசின் முதல்வர்களும் (நிதிஷ்குமார் போன்றவர்கள்) வற்புறுத்தி, பிரதமரை, பீகார் மாநிலத்திலிருந்து ஒரு அனைத்துக் கட்சி குழுவே நேரில் சென்று வற்புறுத்தி கோரிக்கையும் வைத்தது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், தமிழகம் போன்ற பல மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கை பரவலாக பல ஆண்டுகளாக வற்புறுத்தி வரப்படுகின்றது.

என்ன சிக்கல்? என்ன பிரச்சினை?

நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் சாதிவாரியான கணக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை. அதில், சில பல சிக்கல்களும், பிரச்சினைகளும் உள்ளன என்ற கருத்தடங்கிய பிரமாணப் பத்திரத்தை மனுவில் தாக்கல் செய்துள்ளது பிரதமரின் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. என்ன சிக்கல் என்பது விளங்கவில்லை?

ஏற்கெனவே எடுக்கும் புள்ளிவிவர சேகரிப்பில், சாதி என்ன என்று கேட்டு, (அந்தந்த மாநிலத்திலும், மத்திய பட்டியலிலும் எல்லாம் இருக்கும் நிலையில்) அதைப் பதிவு செய்யவேண்டியதுதானே! இது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த முடிவு அறிவிக்கப்படுகிறது; காரணம், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குத்தான் இதனால் மிகப்பெரும் பாதிப்பு.

நீதிமன்றம் கேட்கும் ஒரே கேள்வி

ஏற்கெனவே இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ள மாநிலங்களிலிருந்து உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்குகள் போடப்படும் நிலையில், நீதிமன்றம் கேட்கும் ஒரே கேள்வி, ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் சாதிக்கென்று உள்ளதா? (Quantified Quota - Data) உண்டு என்பதைச் சொல்லி, அவர்களது நியாயங்களைச் சொல்ல, இந்தக் கணக்கெடுப்பு - சென்சஸ் - சாதிவாரியாகப் பதிவு செய்வதன்மூலமே பாதுகாக்க முடியும். லாலுபிரசாத் யாதவ், "பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்கூட கணக்கெடுப்பு நடைபெறுகின்றன. மனிதர்களான நமக்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்புக் கூடாதா?" என்று கேட்டுள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி., என்ற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர்பற்றி சாதி அடிப்படையில் பதிவு செய்கையில், இந்த மறுப்பின் மூலம் வெகுவாக பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்டோர்தானே. 1980 இல் மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்த இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவான மண்டல் கமிசன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் அளவாக 52 சதவிகிதம் என்பது பதிவாகியுள்ளது!

இந்த 40 ஆண்டுகாலத்தில் மொத்த மக்கள்தொகைப் பெருக்கம் 130 கோடியாக பெருகிய நிலையில், ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினரின் மக்கள்தொகை பெருகியதா? சுருங்கியதா? என்பது முக்கியமாகத் தெரிய வேண்டியது அவசியம் அல்லவா? இட ஒதுக்கீடு இந்த மக்களுக்குக் கிடைக்க இந்தப் புள்ளிவிவரங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்மூலம் வெளிப்பட்டால், அது அவர்களுக்கு அனுகூலமாகிவிடக் கூடும் என்பதைத் தடுப்பதற்குத்தானே, இப்படி சாதிவாரி குறிப்பு எடுக்கப்பட முடியாது என்று மத்திய மோடி அரசு கைவிரிக்கிறது.

ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றத் தயாரா?

பாஜக சாதியை விரும்பவில்லையானால், நாளைக்கே, 'நாட்டில் இனி சாதியே கிடையாது; சட்டப்படி ஒழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றத் தயாரா? ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று எல்லாம் 'ஒரே' கோரஸ் பாடுவோர் ஏன் சாதிகளை ஒழித்து 'ஒரே சாதி' என்று சட்டம் போட்டுவிட்டால், இந்த சென்சசில் 'சாதி' குறிப்பு  கேட்கப்பட வேண்டிய அவசியம் இருக்காதே! அதைச் செய்யத் தயாரா? பிரதமர் மோடியை சமூகநீதியின் காவலர் என்று கூறியது உண்மையானால், இப்படி ஒரு முடிவை எடுத்து, நெருப்புக்கோழி மனப்பான்மையைக் காட்டுமா அவரது அரசு!

களம் காண ஆயத்தமாவீர்! அணியமாவீர்!

நாடு தழுவிய அளவில் இதனை வற்புறுத்தி அறப்போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம். இதன்மூலம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது! ஒடுக்கப்பட்டோர் உரிமைக்குக் களம் காண அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக்கான உரிமையைப் பெற்று வாழ்ந்திட உரிமைப் போராட்டத்திற்கு ஆயத்தமாவீர்!. எதிலும் இரட்டை வேடம் போடும் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்கள், இதிலும் இரட்டை வேட வித்தைகளிலும், வியூகங்களிலும் ஈடுபட்டு, விளையாட்டை நடத்திப் பார்க்கிறார்கள்".

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments