மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் L&T Construction நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தோப்பூரில் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கின.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82% சதவீத தொகையான ரூ1627.70 கோடிகளை ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு பின்னர் L&T Construction என்ற நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கான நாடகம்:
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பரில் பொதுத்தேர்தலாக இருந்திருந்தால் நவம்பரில் கட்டுமான பணியை தொடங்கி இருப்பார்கள் என்றும் 2 மாதங்களில் 4 முறை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், எய்ம்ஸ் கட்டுமான பணியை ஏன் தொடங்கி வைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
துவங்காத பணியை 2024க்குள் முடித்து விடுவதாக இதுவரை ஒன்றிய அரசு சொல்லி வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், துவங்காத பணியை முடிக்கின்ற தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு எங்கு கற்றுக்கொண்டது? என்று விமர்சித்துள்ளார்.
மதுரையோடு அறிவிக்கப்பட்ட 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டன என்றும் அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் என்ன செய்தார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.