அமெரிக்காவின் முன்னாள் பிரதிநிதியும் பொருளாதார நிபுணருமான டாக்டர் டேவ் பிராட், எச்-1பி விசா திட்டத்தில் "தொழில்துறை அளவிலான மோசடி" நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஆண்டுக்கு 85,000 எச்-1பி விசாக்களுக்கு மட்டுமே உச்ச வரம்பு இருக்கும் நிலையில், சென்னை மண்டலத்திற்கு மட்டும் 2,20,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது வரம்பைவிட 2.5 மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார். எச்-1பி விசாக்களில் 71% இந்தியாவில் இருந்து வருகின்றன என்றும், இது அமெரிக்க ஊழியர்களின் வேலைகளை பறிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சென்னை அமெரிக்க தூதரகம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளுக்கான விண்ணப்பங்களைக் கையாள்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தூதரகத்தில் பணியாற்றிய மவாஷ் சித்திக் என்ற முன்னாள் அதிகாரியும், இந்தியாவிலிருந்து வரும் எச்-1பி விசாக்களில் 80–90% போலி ஆவணங்கள் அல்லது திறமையற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டவை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஐதராபாத்தின் அமீர்பேட்டை பகுதியில் போலி சான்றிதழ்கள் விற்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த மோசடிகளை தடுக்க முயன்றபோது அரசியல் அழுத்தங்கள் வந்ததாகவும் சித்திக் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் சமீபத்தில் எச்-1பி விசா திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், இந்த குற்றச்சாட்டுகள் விசா திட்டத்தின் மீதான ஆய்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.