வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் ஒருவர் மேல் ஒருவர் விமர்சங்களை வைத்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும். இந்தப் பயணம் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்ற விவரத்தைப் பின்னர் அறிவிப்போம்’ எனக் கூறினார்.
அப்போது ஸ்டாலின் இந்த பயணத்தை விமர்சனம் செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘ஸ்டாலின் அடிக்கடி சொந்த விஷயமாக வெளிநாடு செல்கிறாரே … அது ஏன்? அவர் சொந்த காரணங்களுக்காக வெளிநாடு செல்கிறார். நான் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக செல்கிறேன்’ எனப் பதிலளித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து ஸ்டாலின் தெரிவித்ததாவது, முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.