அமமுகவில் இருந்து விலகி பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் சந்தித்து வருகிறார் தினகரன். இதற்காகவே இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியும் உள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளருமான பச்சைமால் அதிமுகவில் சேரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவருடன் சேர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
கட்சி அரசியல் ரீதியாக சறுக்கலில் உள்ளதாலும், கட்சியில் போதிய நிதி இல்லாத காரணத்தாலும் சொந்தமாக செலவு செய்ய காசும் இல்லாத காரணத்தாலும் பச்சைமால் அமமுகவை விட்டு விலகுவதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால், டிடிவி தினகரன் இது எது குறித்தும் கலங்குவதாகவும் சோர்வு அடைவதாகவும் தெரியவில்லை.