இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் போர் நிலவரம் குறித்து பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் “இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினை இன்று நேற்றாக நடப்பது அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளை நாம் அறத்தின் அடிப்படையில் பதிலடி கொடுக்கிறோம். இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைதான் அழித்தது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் போர் தொடுக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள்.
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய அரசுக்கும், எல்லையோர மக்களுக்கும் துணையாக நிற்க வேண்டும். நமது நாட்டில் ராணுவம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் அங்கே ராணுவ கட்டுப்பாட்டில்தான் அந்த அரசு இருக்கிறது. இந்த தாக்குதல் இன்றோ, நாளையோ முடியப்போவது இல்லை.
நாம் நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைப்படத்திலிருந்தே இல்லாமல் ஆக்க முடியும். ஆனால் ரஷ்யா - உக்ரைன் போல நாம் எல்லையை பிடிப்பதற்காக போர் செய்யவில்லை. தீவிரவாதத்தை ஒழிக்க போர் செய்கிறோம்.
இந்திய அரசுக்கு ராணுவத்திற்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் பேரணி வரவேற்கத்தக்கது” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K