நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலில், தவெக சார்பில் கோரப்பட்ட சாலை பேரணிக்கு, சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், பொதுக்கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிப்பதாக தெரிவித்தது.
இதையடுத்து, தவெக சார்பில் டிசம்பர் 9ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் மைதானத்தை ஆய்வு செய்த பின்னர், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கான அனுமதி கடிதத்தை, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இன்று புதுவை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் என். ரங்கசாமியை நேரில் சந்தித்து பெற்று கொண்டார். இதன் மூலம், திட்டமிட்டபடி புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.