இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் மூலம் இதுவரை 75 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை இந்தியா முழுவதும் 150 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதுவரை 75 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை மேற்கோள் காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “75 சதவீதம் பேர் டபுள் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதற்காக சக குடிமக்களுக்கு வாழ்த்துகள். இது முக்கியமான சாதனை. எங்கள் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது அனைவருக்கும் பெருமை” என்று தெரிவித்துள்ளார்.