தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேமுதிகவின் பிரேமலதா, அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்து பேசியது வைரலாகியுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கரூர் பகுதியில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “தமிழகத்தில் எத்தனைக் கட்சி உள்ளது என கரூரில் உள்ள அமைச்சரை கேட்டால் சரியாக சொல்வார். அத்தனைக் கட்சிக்கும் சென்று வந்தவர் தான் இந்த கரூர் அமைச்சர். சொல்ல முடியாது சீக்கிரத்துல தேமுதிகவுக்கு வந்தாலும் வந்துவிடுவார்” என்று பேசியுள்ளார்.
மேலும் “தேமுதிகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தையே கேப்டன் மாற்றி இருப்பார். இன்னும் எங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை தேமுதிக செய்து முடிக்கும்” என்று பேசியுள்ளார்.