2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கி விட்டன
. அதிமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. மேலும், தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் அந்த கூட்டணியில் இணையும். திமுகவை பொருத்தவரை வழக்கம் போல் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகள் அந்த கட்சியுடன் இணையும்.
நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதாக அறிவித்துவிட்டது. விஜயின் தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா இல்லை தனித்து போட்டியிடும என்பது தெரியவில்லை. பாமகவும் தேமுதிகவும் என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. தேமுதிக கடந்த சில வருடங்களாகவே அதிமுக கூட்டணியில் பயணித்து வந்தது. இந்த முறையும் அது அதிமுகவுடன்தான் கூட்டணி அமைக்கும் என அரசியல் விமர்சிகர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது போன முறை நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக அதிமுக உறுதி அளித்தது. அது எப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? என நிருபர் ஒருவர் கேட்டதற்கு பதில் சொன்ன பிரேமலதா தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக எழுதி கொடுத்தார்கள். 2025ல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் 2026 கண்டிப்பாக கொடுக்கிறோம் என சொல்லி இருக்கிறார்கள். அதே நேரம் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக மட்டுமே நாங்கள் கூட்டணி அமைக்க போவதில்லை. மக்கள் விரும்பும் கூட்டணி, தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்.
மக்கள் விரும்பும் ஆட்சியை கேப்டனின் காலடியில் வைப்போம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கிறது அதற்கு காரணம் நிறைய பேருக்கு இங்கே வேலை இல்லை. எனவே வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கஞ்சா, சாராயம் ஆகியவற்றை அரசு களையெடுக்க வேண்டும் என பேசியிருக்கிறார்.