சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது எனவும், இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை குறித்துப் பேசும்போது, அதிகபட்சமாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை மற்றும் குறைந்தபட்சமாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், இன்று தென்மேற்கு வங்கக்கடலில் சில இடங்களில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.