ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பனிப்போர் ; சாதகமாக பயன்படுத்தும் மோடி?
, வெள்ளி, 13 அக்டோபர் 2017 (09:03 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
.
துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என முன்பே செய்திகள் வெளியானது.
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோரோடு நேற்று டெல்லி சென்றார். அவர்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து தாங்கள் ஒதுக்கப்படுவது குறித்து முறையிடுகிறார்கள் என செய்திகள் வெளியானது.
ஆனால், பிரதமரின் சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த ஓ.பி.எஸ் அதை மறுத்தார். “எனக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையேயும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் தொடர்பாகவே பிரதமரை சந்தித்து பேசினோம். மற்றவர்களின் ஊகங்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. இந்த ஆட்சி தொடரும். தற்போதுள்ள அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது. எல்லா அமைச்சர்களுடனும் கலந்து ஆலோசித்த பின்பே முதல்வர் முடிவெடுக்கிறார். எங்களுக்கு சரியாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது பொய்யான செய்தி” என அவர் தெரிவித்தார்.
ஆனால், மீண்டும் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஓ.பி.எஸ் அப்படி சொல்கிறார். அவரின் மனதிற்குள் புகைச்சல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காகவே அவர் மோடியை சந்தித்தார் என அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும், இரு மாதங்களாக மோடியை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டு காத்திருக்க, ஓ.பி.எஸ்-ஐ வரவழைத்து பேசியிருக்கிறார் மோடி. அதாவது, எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்-ற்கும் இடையே பிரச்சனை உள்ளவரை அதில் குளிர்காயலாம் என பாஜக நினைப்பதாக தெரிகிறது. அதோடு, டெல்லியில் தன்னுடைய பலத்தை காட்டவே, மோடியை அடிக்கடி ஓபிஎஸ் சந்திக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்