தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள சக்கம்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 180க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அப்பள்ளி மாணவர்கள் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி சீருடையிலேயே அவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும், அங்குள்ள ஆசிரியர்கள் மேற்பார்வையில் குப்பைகளை கூட்டும் போட்டோக்களும் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளுக்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கும்போதும், படிக்கவரும் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சர்ச்சையானதை தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.