ரஜினி அரசியலுக்கு வரும் நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் அவருடன் ஸ்ட்ரைட்டா போர் தான் என்றும், தன்னிடம் இருந்து ரஜினி தப்பிக்கவே முடியாது என்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று சூலூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சீமான் பேசியபோது, '"ரஜினிகாந்த் இப்போ அரசியலுக்கு வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்! ஒரே கேள்விதான்.. தமிழன் மண்ணில் மராட்டியனுக்கு என்ன வேலை? இந்த கேள்வி மட்டுமல்ல, நான் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் ரஜினி பதில் சொல்லி தப்பிக்க முடியாது. அதுவும் பொது விவாதத்துக்கு எல்லாரையும் கூப்பிடுன்னு சொல்லிடுவேன். நேருக்கு நேர் சண்டை வந்துடும் ஆட்டம் காலியாயிடும். அந்த நாளுக்காக ஐ ஆம் வெயிட்டிங்! என்று ஆவேசமாக பேசினார்.
மேலும் அடுத்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் தனது கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்றும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் வல்லப்பாய் பட்டேல் சிலைக்கு நிகராக விவசாயிக்கு சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், விவசாயிகள் குறித்து யாராவது நக்கலுடன் பேசினால் அவர்களை இருட்டு அறையில் பூட்டி வைப்பேன்' என்றும் சீமான் பேசியுள்ளார்.