மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு வழக்கில் வாதிட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கோயில் நிர்வாகம் அதை அமல்படுத்தாததால், நீதிபதி மீண்டும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் ஏற்ற உத்தரவிட்டார்.
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "நீதிமன்ற உத்தரவை வைத்துக்கொண்டு மனுதாரர் தரப்பு கலவரத்தை ஏற்படுத்தியது. காவல்துறையின் தடுப்புகள் உடைக்கப்பட்டு, இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். அரசின் அச்சம் உண்மையாகி, மத நல்லிணக்க பிரச்சினை ஏற்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
மேலும், நீதிமன்ற பாதுகாப்பு படையான சிஐஎஸ்எஃப்-ஐ மனுதாரரின் பாதுகாப்புக்கு அனுப்பியது தவறு என்றும், தனி நீதிபதி சட்டத்தை மீறி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கலவரத்தை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பு பதிலளித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தனர்.