தினகரனை பார்த்து திமுக அஞ்சவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் எஸ்.காமராஜ், திமுக சார்பில் பூண்டி கலைவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக இன்னும் ஓரிரு நாட்களில் தனது வேட்பாளாளரை அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் நேற்று திமுக, அதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகள் இச்சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது உகந்தது அல்ல என கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள். அமமுகவை பார்த்து எல்லா கட்சிகளும் பயம் எனவும் திருவாரூரில் அமமுக தான் வெற்றி பெறும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய, திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் திமுகவின் கோட்டை, எவன் நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது. தினகரன் ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் ஜெயித்தார் என்பது ஊருக்கே தெரியும். மேலும் பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியிருக்கும் தினகரன் தான் தேர்தலை கண்டு பயப்பட வேண்டும். திமுகவின் பூண்டி கலைவாணன் தான் இத்தேர்தலில் உறுதிபட வெற்றி பெறுவார் என ஸ்டாலின் கூறினார்.