திருவாரூரில் தினகரனை தோற்கடிக்க ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய பிளானை கையிலெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்தந்த கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.
திருவாரூரில் திமுக சார்பில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட யாரேனும் போட்டியிடலாம் என தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டார்.
13 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருக்கும் பூண்டி கலைவாணன் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை இரண்டு முறை விட்டுக் கொடுத்தவர். திமுகவிற்காக நிறைய அடிப்படை பணிகளை திருவாரூரில் செய்தவர்.
கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நின்ற இரண்டு தேர்தலிலும் அவர் வெற்றி பெற பூண்டி கலைவாணன் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். இதை மனதில் வைத்தே ஸ்டாலின் பூண்டி கலைவாணனை முன்னிறுத்தியுள்ளார்.
இதற்கு மேலாக தினகரன், ஜாதி ஓட்டை பெறுவதற்காக எஸ்.காமராஜை முன்னிறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. இதனையறிந்த ஸ்டாலின் அதே ஜாதியை சேர்ந்த பூண்டி கலைவாணனை முன்னிறுத்தியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடந்த கருத்துக்கணிப்பில் திமுக, அமமுகவிற்கு தான் போட்டியிருக்கும் என தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.