Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்!-அன்புமணி ராமதாஸ்

Anbumani

Sinoj

, புதன், 21 பிப்ரவரி 2024 (21:19 IST)
சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்! என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
''தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை
கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
 
2009 மே மாதம் 31 ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.
 
ஆனால்,01.06.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப் படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.

ஊதிய முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 19&ஆம் தேதி முதல், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான 19&ஆம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து 20&ஆம் தேதியான நேற்று மீண்டும் போராட்டம் நடத்திய போதும் அவர்களை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைக்குள்ளாவதை நியாயப்படுத்தவே முடியாது.
 
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை நான் மட்டும் வலியுறுத்தவில்லை. இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
 
ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று 311&ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.
 
இடைநிலை ஆசிரியர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும், அதை ஒடுக்குவதே அரசின் கொள்கையாக உள்ளது. 2022&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
 
அதனால், கடந்த செப்டம்பர் 28&ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை அக்டோபர் 5&ஆம் நாள் காவல்துறை விரட்டியடித்தது; பலரை கைது செய்தது. அப்போதும் மூவர் குழுவின் அறிக்கை அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு மீண்டும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகியும் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் தான் இடைநிலை ஆசிரியர்கள் இப்போது மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 
ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும். தங்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையாக அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண் வங்கப்புலி விஜயன் உயிரிழப்பு